தங்கள் மேலான விமர்சனங்களுக்கு நன்றிகள். அதிலும் எனது ஆவணப்படத்தை
வாழ்த்தியும் சிறப்பித்தும் கருத்துக்களைக் கூறிய திரு.திருவாசகம்,
திரு.க.சிவநேசன், நீர்வைப்பிரியன் ஆகியோரின் கருத்துக்களுக்கு நன்றிகள்.
அன்பிற்குரிய அகிலன் அவர்களுக்கு, தங்கள் சிந்தனைகள் மேலானவை. ஆனால்
தாங்கள் இன்னமும் இங்குள்ள நிலையைச் சரிவர அறிய வேண்டும். நாங்கள்
இன்னமும் மணித்தியாலத்திற்கு 50 தொட்டு 60 ரூபாய் வரை இணையப்பாவனைக்கு
அறவிடும் நெற்கபே என்ற பொது இணைய பாவனை நிலையங்களிலிருந்தே
இவ்விணையத்திற்கு செய்திகளை அனுப்பி வருகிறோம்.
இது இவ்வாறிருக்க, இங்குள்ள சில மாணவர்களும் அவ்வாறே செய்து
இணையத்தைப் பார்த்து வருகின்றனர். இங்கு இன்னமும் சீரான இணைய வசதிகள்
ஏற்படவில்லை. மிக்க வசதி படைத்தவர்களே வீடுகளில் இணையம் வைத்திருக்கும்
நிலையிருப்பதும் அவதானிக்க முடியும். அப்படியாகிலும் அதனைச் செவ்வையாகப்
பார்ப்பதில் கவரேஜ்ஜூம் இருக்க வேண்டும். டொங்கிள்களில் உள்ள முக்கிய
பிரச்சினை இதுவே. மின்சாரச்சிக்கல் இதனை விட முக்கியமானது. நாம் ஓய்வாக
இருக்கும் நேரத்தில் (ஞாயிற்றுக்கிழமை) அனேகமாக மின்சாரமும் ஓய்வெடுத்து
விடுவதும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். இந்த நீர்வேலி இணையம்
ஜெ.செந்தூரன் அவர்களே; சிறப்பாக வடிவமைப்புப் பெறக் காரணராய்
இருக்கிறார்.
இதனை நீர்வைக்கிழார் அவர்கள் குறிப்பிட்டதற்கு அப்பால் நானும்
கூறக்காரணம் இதனால் நாம் பெறும் அவதியேயாகும். இவ்வாறிருக்க, தாங்கள்
குறிப்பிடுவது போன்ற நிலை ஏற்படுவதற்கு நம் நாட்டுச் சூழல் இன்னமும்
முன்னேற வேண்டும். பிற இணையத்தளங்களில் நம் இணையச்செய்திகள்
மாற்றங்களுக்கு உட்பட்டு வருவதை அவதானித்திருக்கிறேன். நாமும் பிற
இணையங்களிலிருந்து ஒரு சில படங்களை எடுத்துப் பிரசுரிக்கிறோம். இது
தவறல்ல… முக்கியமான விஷயங்கள் மாறக்கூடாது. ஆனால் எம் இணையத்தளத்தில்
வந்த ஆவணப்படமே முழு மாற்றத்துடன் இன்னொரு இணையத்தளத்தில் அப்படியே
பிரசுரமாகியிருப்பதையும் நான் கண்டிருக்கிறேன். (எங்கிருந்து பெற்றோம்
என்பது பற்றிய எந்தக் குறிப்பும் இல்லாமல்..குறித்த இணையப்பெயருடன்…)இவை
இணையத்தில் சகஜமே..
எது எப்படியாகிலும் தாங்கள் தங்கள் வேலைப்பழுக்களுக்கு மத்தியிலும்
தாங்கள் இவ்விணையத்தளத்தைப் பார்வையிட்டு தங்கள் கருத்துக்களைப் பதிவு
செய்வது மகிழ்ச்சிக்குரியது. இவையே எமக்கு மிக்க உத்சாகத்தைத் தருகிறது.
தொடர்ந்து பாருங்கள் கருத்துக்கூறுங்கள்… தங்கள் விமர்சனங்கள்
யாவற்றிற்கும் நன்றிகள்…
சிறியவனான என் கருத்துக்களில் தவறிருப்பின் பொறுத்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.
அன்புடன்…
தி.மயூரகிரி
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக திருத்தம் செய்யப்படாமல் மிகவும் பாரதூரமாக குன்றும் குழியுமாகக் காணப்படும் ராஜவீதியையும் பருத்தித்துறை வீதியையும் இணைக்கும் அரசகேசரிப்பிள்ளையார் கோயில் வடக்கு வீதியை ஊடறுத்துச் செல்லும் தேர்முட்டி ஒழுங்கை என்றும் அழைக்கப்படும் கேராலிவத்தை வீதியின் திருத்தப் பணிகள் ஆரம்பமாகவுள்ளன.
வாகனங்களில் செல்வோருக்கும் பாதசாரிகளுக்கும் மிக முக்கியமாக விவசாயிகள், கால்நடை வளர்ப்போர், வயற்செய்கையாளர்கள் ஆகியோருக்கும் பெரும் இடையூறாக இருக்கும் இவ்வீதியின் சீரற்ற நிலை வரும் மாரிகாலத்திற்கு முன் விரைந்து திருத்தப்பெற்றால் தாம் மகிழ்ச்சியடைவோம் என்று இப்பகுதிப் பொதுமக்கள் பலர் தெரிவித்தனர்.
முறிகண்டி என்றதும் நம் அனைவரதும் நினைவிற்கும் வருவது அங்குள்ள பிள்ளையார் கோயில் முறிகண்டி என்பது தமிழகத்தின் முருகன்பூண்டி என்ற சொல்லின் ஓசையையுடையதாதலும் சிந்திக்கத்தக்கது. முறிவண்டி என்பதே முறிகண்டி என்றானது என்பதும் பலரது அபிப்ராயம். இவை எப்படியாகிலும் இங்குள்ள பிள்ளையார் மீது இப்பகுதியூடாகச் செல்வோர் யாவரும் மிக்க நம்பிக்கையும் பயமும் கொண்டோராயிருக்கின்றனர்.
ஏ- ஓன்பது வீதியில் அமைந்திருக்கிற இப்பிள்ளையாரிடத்தில் வேண்டிக் கொண்டே இப்பாதையில் செல்லும் அனைவரும் பயணிப்பது பேருண்மை. இதில் மத, இன, மொழி பேதங்கள் எவையும் எவரும் பார்ப்பதில்லை. இப்பெருமானுக்கு எதிர்வரும் ஆவணிச்சதுர்த்தியன்று விசேட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று அங்கே அடியவர்கள் யாவருக்கும் அன்னதானமும் வழங்கப்பெறவுள்ளதாக கோயிலார் அறிவித்துள்ளனர்.
வவுனியா சூசைப்பிள்ளையார்குளம் ‘திந்திருதரு மூல கணபதி ஆலயம்’ என்ற புளியடி சித்திவிநாயகர் ஆலயத்தில் ஆவணிச்சதுர்த்தி வைபவம் 11.09.2010 சனிக்கிழமை காலை 5.30மணியிலிருந்து விசேட அபிஷேக பூஜை ஆராதனைகள் இடம்பெறுவதுடன் விசேட சந்தனக்காப்பு அலங்காரத்தில் பிள்ளையார் காட்சியளிப்பார். மாலை விசேட வசந்தமண்டப பூஜையுடன் திருவீதியுலாவும் இடம்பெறும்.
இன்று நல்லைக்கந்தசுவாமி கோயிலில் மாலை வேளை உத்ஸவத்தில் சுவாமி தேவியருடன் திருப்புகழ் இசை முழங்க உள்வீதிவலம் வந்தான். ஓதுவாமூர்த்திகளின் திருப்புகழ் இசை முழக்கம் செவிகளுக்கு இனிமை சேர்த்தது. அதனைத் தொடர்ந்து வெளிவீதியில் தங்கரதத்தில் இவர்ந்து அடியார்களுக்குக் காட்சி கொடுத்தான்.
இது இவ்வாறாக ஒரு பசுவொன்றும் சுவாமி எழுந்தருளவிருந்த தங்கரதம் அருகில் கோபுரத்தை நோக்கியவாறு சுவாமியின் வரவை எதிர்பார்த்து இயல்பாக (மக்கள் கூட்டத்திடையே தனக்கே உரிய பக்தியுடன்) நின்றிருந்தமையும் அவதானிக்க முடிந்தது.
நல்லைக்கந்தன் கோயில் தெற்கு (ஷண்முகர்) ராஜகோபுரப்பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளதை இன்று காணமுடிந்தது. இதனடிப்படையில் வெள்ளைபூசுதல், வர்ணம் தீட்டுதல் ஆகிய பணிகள் நடைபெறத் தொடங்கியிருப்பதையும் என்னால் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
நீர்வேலி தெற்கு ‘கந்தபுராணக் கொட்டகை’ முருகையன் கோயிலின் கும்பாபிஷேகம் எதிர்வரும் 12.09.2010 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. அதற்கான பூர்வாங்க கிரியைகள் 10.09.2010 வெள்ளிக்கிழமை தொடக்கம் நடைபெறும். 11.09.2010 சனிக்கிழமை எண்ணைக்காப்புச் சாற்றும் வைபவம் இடம்பெறும்.
நல்லூhக் கந்தன் கோயிலின் தெற்கு ராஜகோபுரப் பணிகள் ஓரளவிற்கு நிறைவு பெற்றுள்ளன. இப்புதிய கோபுரம் கோயிலுக்கு புத்தெழிலையும் ரேழகையும் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சில நாட்களுக்கு முன் வீரகேசரிப் பத்திரிகையின் 80வது ஆண்டு நிiவை ஒட்டிய இசைக்கச்சேரிகளில் கலந்து கொள்ள இலங்கை வந்த சீர்காழி கோவிந்தராஜனின் புதல்வர் பத்மஸ்ரீ. டாக்டர். சிவசிதம்பரம் அவர்கள் நேற்று முன்தினம் யாழ். இந்துக்கல்லூரி விளையாட்டரங்கில் பெருந்திரளான மக்கள் முன்நிலையில் இன்னிசைக்கச்சேரி நிகழ்த்தினார்கள்.
தற்பொது நாடளாவிய ரீதியில் சுமார் 90 ஆயிரம் சமாதான நீதவான்கள் செயற்பட்டு வருகின்றனர். ஆனால் அவர்கள் பற்றிய மிகச் சரியான புள்ளி விவரங்கள் கூட (நீதி) அமைச்சில் இல்லை என்று தெரியவந்துள்ளதாயும் எனவே இனி வரும் காலங்களில் சமாதானநீதவான் பதவிக்கு விண்ணப்பிப்போர் ஜீ.சீ.ஈ உயர்தரப்பரீட்சையில் அல்லது அதற்குச் சமமான பரீட்சையில் கட்டாயம் சித்திபெற்றிருக்க வேண்டும் எனவும் நீதியமைச்சின் உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி உதயன் செய்தி வெளியிட்டுள்ளது.
நொதேன் பவர் நிறுவனத்தின் இயந்திரம் பழுதடைந்ததால் யாழ்ப்பாணத்தில் கடந்த 27ம் திகதி முதல் பரவலாக இருந்து வந்த மின்வெட்டு எதிர்வரும் ஞாயிறுடன் சீராகி இயங்கும் என்று மின்சார சபையின் வடபிராந்திய பிரதிப் பொதுமுகாமையாளர் ஆர்.முத்துரட்ணானந்தம் தெரிவித்திருக்கிறார்.
அகில இலங்கை அரச அதிபர்களின் மாநாடு சுழற்சி முறையில் மாதாந்தம் ஒவ்வொரு மாவட்டத்தில் நடைபெற்று வருவது வழக்கம். எனினும் யாழ்ப்பாணத்தில் இது பல்வேறு காரணங்களால் கடந்த காலங்களில் நடைபெறவில்லை. எனினும் எதிர்வரும் 6ம் 7ம் திகதிகளில் இம்மாநாடு யாழ். செயலக மாநாட்டு மண்டபத்தில் மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளது.
நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் ஆலயச் சூழலில் அமைந்துள்ள ஸ்ரீகணேசா முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா எதிர்வரும் 05.09.2010 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு முன்பள்ளி முன்றலில் சிவஸ்ரீ.கு.தியாகராஜக்குருக்கள் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் உள்நாட்டு இறைவரித்திணைக்கள அதிகாரி திரு.க. இராசையா அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
சிறப்பு விருந்தினர்களாக வலி.கிழக்குப் பிரதேச சபைச் செயலாளர் திரு.தநடராசா, கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் காலசாலை விரிவுரையாளர் திரு.ச.லலீசன், யாழ்.சமூக அபிவிருத்தி மன்ற தலைவர் ருக்மணி ஆனந்தவேல், வலி.கிழக்குப் பிரதேச சபைப் பொறுப்பதிகாரி திருமதி.பே.சுகுமார், ‘மழலைகளின் தாய்’ திருமதி.ந.ஜெகதீசன், நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரி முதல்வர் திரு.இ.குணநாதன், சீ.சீ.த.க. பாடசாலை முதல்வர் திரு.இ.பசுபதீஸ்வரன், றோ.க.த.க. பாடசாலை முதல்வர் திரு.சி.தர்மரத்தினம், அச்செழு சைவப்பிரகாச வித்தியாசாலை முதல்வர் திரு.ச. வேலழகன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
கௌரவவிருந்தினர்களாக நீர்வேலி தெற்கு கிராம அலுவலர். திரு.ச.சண்முகவடிவேல், ‘சமாதான நீதவான்’ திரு.க.தர்மலிங்கம் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். இந்நிகழ்விலே ஆசியுரையை நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் ஆலயத்தைச் சேர்ந்த சிவஸ்ரீ.சோ.சிவஜெயக்குருக்களும் வரவேற்புரையை முன்பள்ளி ஆசிரியை செல்வி.செசிவாஜினியும் நன்றியுரையை முன்பள்ளிச் செயலர் ந.ஜெயகிருஷ்ணனும் வழங்கவுள்ளனர்.
தங்கள் மேலான விமர்சனங்களுக்கு நன்றிகள். அதிலும் எனது ஆவணப்படத்தை வாழ்த்தியும் சிறப்பித்தும் கருத்துக்களைக் கூறிய திரு.திருவாசகம், திரு.க.சிவநேசன், நீர்வைப்பிரியன் ஆகியோரின் கருத்துக்களுக்கு நன்றிகள். அன்பிற்குரிய அகிலன் அவர்களுக்கு, தங்கள் சிந்தனைகள் மேலானவை. ஆனால் தாங்கள் இன்னமும் இங்குள்ள நிலையைச் சரிவர அறிய வேண்டும். நாங்கள் இன்னமும் மணித்தியாலத்திற்கு 50 தொட்டு 60 ரூபாய் வரை இணையப்பாவனைக்கு அறவிடும் நெற்கபே என்ற பொது இணைய பாவனை நிலையங்களிலிருந்தே இவ்விணையத்திற்கு செய்திகளை அனுப்பி வருகிறோம். இது இவ்வாறிருக்க, இங்குள்ள சில மாணவர்களும் அவ்வாறே செய்து இணையத்தைப் பார்த்து வருகின்றனர். இங்கு இன்னமும் சீரான இணைய வசதிகள் ஏற்படவில்லை. மிக்க வசதி படைத்தவர்களே வீடுகளில் இணையம் வைத்திருக்கும் நிலையிருப்பதும் அவதானிக்க முடியும். அப்படியாகிலும் அதனைச் செவ்வையாகப் பார்ப்பதில் கவரேஜ்ஜூம் இருக்க வேண்டும். டொங்கிள்களில் உள்ள முக்கிய பிரச்சினை இதுவே. மின்சாரச்சிக்கல் இதனை விட முக்கியமானது. நாம் ஓய்வாக இருக்கும் நேரத்தில் (ஞாயிற்றுக்கிழமை) அனேகமாக மின்சாரமும் ஓய்வெடுத்து விடுவதும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். இந்த நீர்வேலி இணையம் ஜெ.செந்தூரன் அவர்களே; சிறப்பாக வடிவமைப்புப் பெறக் காரணராய் இருக்கிறார்.
இதனை நீர்வைக்கிழார் அவர்கள் குறிப்பிட்டதற்கு அப்பால் நானும் கூறக்காரணம் இதனால் நாம் பெறும் அவதியேயாகும். இவ்வாறிருக்க, தாங்கள் குறிப்பிடுவது போன்ற நிலை ஏற்படுவதற்கு நம் நாட்டுச் சூழல் இன்னமும் முன்னேற வேண்டும். பிற இணையத்தளங்களில் நம் இணையச்செய்திகள் மாற்றங்களுக்கு உட்பட்டு வருவதை அவதானித்திருக்கிறேன். நாமும் பிற இணையங்களிலிருந்து ஒரு சில படங்களை எடுத்துப் பிரசுரிக்கிறோம். இது தவறல்ல… முக்கியமான விஷயங்கள் மாறக்கூடாது. ஆனால் எம் இணையத்தளத்தில் வந்த ஆவணப்படமே முழு மாற்றத்துடன் இன்னொரு இணையத்தளத்தில் அப்படியே பிரசுரமாகியிருப்பதையும் நான் கண்டிருக்கிறேன். (எங்கிருந்து பெற்றோம் என்பது பற்றிய எந்தக் குறிப்பும் இல்லாமல்..குறித்த இணையப்பெயருடன்…)இவை இணையத்தில் சகஜமே..
எது எப்படியாகிலும் தாங்கள் தங்கள் வேலைப்பழுக்களுக்கு மத்தியிலும் தாங்கள் இவ்விணையத்தளத்தைப் பார்வையிட்டு தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்வது மகிழ்ச்சிக்குரியது. இவையே எமக்கு மிக்க உத்சாகத்தைத் தருகிறது. தொடர்ந்து பாருங்கள் கருத்துக்கூறுங்கள்… தங்கள் விமர்சனங்கள் யாவற்றிற்கும் நன்றிகள்… சிறியவனான என் கருத்துக்களில் தவறிருப்பின் பொறுத்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.
இன்று காலை நல்லூர்க் கந்தஸ்வாமி கோயிலில் புல்லாங்குழல் இசையுடன் ஸந்தான கோபால ஸ்வாமி வீதியுலா வந்த காட்சி இடம்பெற்றது. அதிகாலையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கந்தனும் கண்ணனும் கலந்து காட்சி தந்த சிறப்பு கண்களுக்கு விருந்தாக அமைந்தது.
இதே வேளை நேற்று இணுவில் காயத்ரீபீடம் தாணு.மஹாதேவ வாத்யார் தலைமையில் வேதபாராணயம் மிகச்சிறப்பாக இடம்பெற்றது. நேற்றைய தினம் மாலை ஸ்வாமி உள்வீதியுலா வந்த போது ஏராளமான அந்தணர்கள் ஒன்று கூடி வீதி முழுவதும் ஸ்வாமி முன்றலில் கணபதி உபநிஷதம், ஸ்ரீருத்ரம், புருஷ சூக்தம், துர்கா மூக்தம், ஸ்ரீ கூக்தம், சமகம், நமகம், ஸாந்தி பஞ்சகம், முதலிய வேத மந்திரங்களைப் பாராயணம் செய்து சென்றனர். தற்போது எழுச்சி பெற்று வரும் ஷண்முகர் ராஜகோபுர வாயிலில் சாமகான பாராயணம் மிகச்சிறப்பாகவும் எழுச்சியாகவும் இடம்பெற்றமை மிகச்சிறப்பாயிருந்தது. வல்லி தேவஸேனாவுடன் ஸ்வாமி பச்சை மயிலேறி வீதியுலாக் கொண்டருளினார்.
கிளிநொச்சி சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்திற்கு வருகைதந்த நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அப்பாடசாலையில் தங்கியிருக்கும் மக்களுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறி இறையாசீர்வாதம் வழங்கினார். நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் அழைப்பின்பேரில் (01.09.2010) நேற்று முன்தினம் சாந்தபுரம் கலைமகள் வித்தியாத்திற்குச் சென்ற ஆதீன முதல்வர் அந்த முகாமில் உள்ள மக்களுடன் கலந்துரையாடினார். தமது வீடுகள், காணிகளுக்கு முன்னால் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டிருக்கும் அவர்கள் தங்களைத் தமது வீடுகளுக்குச் செல்ல அனுமதி வாங்கித் தருமாறு கதறி அழுது கேட்டுக் கொண்டனர். 281 குடும்பங்கள் சிறிய சிறிய கூடாரங்களுள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இரணைமடுக் குளத்தருகே பயிர்ச்செய்கைக்கு மிகவும் சிறப்பான மண்ணான தங்கள் நிலத்திலட தாம் மீளவும் குடியமர வேண்டும் எனத் தமது ஆதங்கத்தை மக்கள் வெளிப்படுத்தினர். அரச சார்பற்ற நிறுவனங்கள்கூட வருகைதர முடியாத சூழலில் தம்மை ஒர் ஆன்மீகத் தலைவர் வந்து சந்தித்து இருப்பது மன ஆறுதலைத் தருவதாக மக்கள் தெரிவித்தனர். மூன்று நேர உணவும் முகாமில் வழங்கப்பட்டாலும் சவர்க்காரம் முதலிய சிறுதேவைப் பொருள்களைத் தமக்கு வழங்கி உதவ ஆவன செய்யுமாறு நாடாளுமன்ற உறுப்பினரிடமும் ஆதீன முதல்வரிடமும் மக்கள் வேண்டுகோள் விடுத்தனர். தகவல்- நீர்வைக்கிழார் 2010-09-02
வட்டக்கச்சி ஸ்ரீ இரங்கநாதசுவாமி திருக்கோவிலின் தேர்த்திருவிழா கடந்த புதன்கிழமை காலை 9 மணிக்குப் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. வன்னியில் இடம்பெற்ற போரின்பின் இடம்பெறும் முதலாவது தேரோட்ட நிகழ்வு இதுவெனப் பக்தர்கள் தெரிவித்தனர். ஸ்ரீதேவி,பூதேவி சமேதராக அனந்தரங்கநாதசுவாமி தேரில் ஏறி அடியவர்களுக்கு அருள் பாலித்தார். பெருந்தொகையான பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்தும் அடியழித்தும் காவடியெடுத்தும் அபாயவேளைகளில் தம்மைக் காத்த இரங்கநாதசுவாமிக்குத் தம் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர். நல்லை ஆதீனமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தேரோட்ட நிகழ்வில் கலந்து கொண்டு ஆசியுரையாற்றினார். நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் வாழ்த்துரை வழங்கினார். கோப்பாய் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் சிவத்தமிழ்ச்சொல்லழகர் ச.லலீசன் “தேர்” என்ற பொருளில் சிறப்புரையாற்றினார். தகவல்- மயூரகிரி 2010-09-02
நல்லூரில ஒரு காலத்தில ஒரு பெரிய ராஜதானி இருந்துச்சாம்… என்ன கதையா? இது… ஆம்.. கதையாக மட்டுமே தான் இந்தச் செய்தி அடுத்த சந்ததியைப் போய்ச் சேரப்போகிறது. கீழ் வரும் கேள்விகளைப் பாருங்கள்… உங்களுக்கு அவற்றிற்கு விடை தெரியுமா..?
1. இப்போ நல்லூரில் அப்படி என்ன புராதனப் பொருட்கள் இருக்கின்றன?
2. யாழ்ப்பாணக் கோட்டைக்கும் தமிழரசிற்கும் ஏதும் தொடர்பிருக்கிறதா?
3. நல்லூர்க் கந்தஸ்வாமி கோயிலைக் கட்டியவர் யார்?
4. யமுனா ஏரி என்பது உண்மையில்….?
5. மந்திரிமனையில் அப்படி என்ன தந்திரம் இருக்கிறது..?
6. சர்ச்சைக்குரிய தோரணம் ஒன்றும் நல்லூரில் இருக்கிறதா?
7. பூதவராயர் என்பது யார்?
8. போர்த்துக்கேயர் செய்த அட்டூழியங்கள் பற்றி அவர்களின் பாதிரியார் என்ன கூறுகிறார்?
9. யாழ்ப்பாண இராச்சியம் அழிந்த போது நீர்வேலி பெற்ற முக்கியத்துவம் என்ன?
10. இன்னமும் … கோயில் யாழ்ப்பாணத்தரசர் காலத்ததா,..?
இவ்வளவு வினாக்களும் என் முன் வைக்கப்பெற்றவை… அவற்றை உங்கள் முன்னும் வைத்திருக்கிறேன். உங்களுக்கும் விடை தெரியவில்லையாகில் இந்த வினாக்களுக்கு விடை காணவும் இதனையே தளமாகக் கொண்டு ஆவணப்படம் ஒன்றை உருவாக்கவும் முயன்ற எனது அனுபவங்களுடனான இவற்றிற்கான விடைகளையும் காண பொறுமையாக
நாளை ஜன்மாஷடமி, கிருஷ்ணஜெயந்தி, கொகுலாஷ்டமி என்றெல்லாம் அழைக்கப்பெறும் நன்நாள். கண்ணபிரான் இவ்வுலிகில் அவதரித்த பொன் நாள். இதை ஒட்டி கிருஷ்ண பகவான் எழுந்தருளியுள்ள ஸ்தலங்கள் தோறும் விசேட வைபவங்கள் நிகழவுள்ளன.
நீர்வேலி அருள்வளர் செல்வக் கதிர்காம தேவாலயத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பால கிருஷ்ணனுக்கு விசேஷ அலங்காரங்கள் செய்யப்பெற்று விசேட ஆராதனை இடம்பெறவுள்ளது. திவ்ய பிரபந்த பாராயணமும் நடைபெறவுள்ளது. வல்லிபுரம்,யாhழ் வண்ணை, பொன்னாலை, கோண்டாவில் , கோப்பாய், அளவெட்டி, முள்ளியவளை, கிளிநொச்சி மட்டுவில், முதலிய விஷ்ணு ஸ்தலங்களிலுமு; கிருஷ்ண ஜெயந்தி உத்ஸவம் மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளது.
அனைத்து உள்ளங்கட்கும் எமது கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்...
நல்லூர் கந்தஸ்வாமி கோயில் வருடாந்த மஹோத்ஸவம் கடந்த பதினேழு நாட்களாக மிகச்சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த வகையில் நாளை 31.08.2010 செவ்வாய்க்கிழமை கார்த்திகை உத்ஸவம் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.
இதே வேளை நாளை காலை 7.00 மணிக்கு சைவத்தமிழ் வளர்ச்சிக்குப் பெரும் பணியாற்றிய ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் பெருமானின் திருவுருவம் நாவலர் கலாசார மண்டபத்திலிருந்து ஊர்வலமாக நாவலர் வீதி, கோயில் வீதி, மற்றும் பருத்தித்துறை வீதி வழியாக மக்கள் நிறைகுடம் வைத்து வரவேற்க, பவனியாகக் கொண்டு வரப்பெற்று நல்லூர் ஆலயச் சூழலிலுள்ள நாவலர் மணிமண்டபத்தில் பிரதிஷ்டை செய்யப்பெறவுள்ளது.
இது இவ்வாறிருக்க, யாழ். மாநகரசபையினால் இன்று திங்கட்கிழமை மதியம் நாவலர் கலாசார மண்டபத்தில் வைத்து நல்லைக்குமரன் மலர் வெளியீடு செய்யப்பெற்றது.
இவற்றுடன் நாளை நல்லையாதீனத்தில் காலை தொடக்கம் பீடாரோஹணவிழா மிகச்சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பெற்றுள்ளன. (விரிவாக அறிய முன் வந்த செய்தியைப் பார்க்கவும்)
இவைகள் இவ்வாறிருக்க நாளை மாலை நல்லூர்க் குமரனுக்கு கார்த்திகை உத்ஸவம் மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளது. முத்துக்குமார ஸ்வாமி வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளி விசேட பூஜாராதனைகளை ஏற்றுக் கொண்ட பின்னர் “பஞ்சரத்ன கீர்த்தனைகள்” இசைக்கப்பெற ஸ்வாமி உள்வீதியுலாக் கண்டருள்வார். தொடர்ந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பெற்ற முத்துச்சப்பரத்தில் வீதியுலா வந்தருள்வார்.
ஸ்ரீ ராமகிருஷ்ணமிஷன் குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர், தூய அன்னை சாரதை, வீரத்துறவி விவேகானந்தர் நெறியில் பணிகளைச் செய்யும் ஹிந்துத் துறவிகளைக் கொண்ட உன்னதமான அமைப்பு. இது தாங்கள் யாவரும் அறிந்ததே.
இந்த அமைப்பு இறையியற் பணிகளுடன் ஆரம்பகாலம் தொடக்கமே மக்கள் பணியிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திச் செயற்படும் ஒரு தொண்டு நிறுவனம். அதிலும் தூய துறவிகளையே பொறுப்பாகக் கொண்ட தன்னலமற்ற சேவை செய்யும் அமைப்பு.
இந்த வகையிலே இலங்கையிலும் சுவாமி விவேகானந்தர் காலம் தொடக்கம் ஸ்ரீராமகிருஷ்ணர் பேரில் திருமடங்கள் உருவாக்கம் பெற்றுள்ளன. இன்றும் கொழும்பில் பிரதான திருமடமும் மட்டக்களப்பில் கிளைமடமும் அமைந்திருக்கிறது. யாழ்ப்பாணத்தின் உரும்பிராயில் வெகு விரைவில் திருமடம் ஒன்று அமைய இருக்கிறது. இது இவ்வாறாக…
இன்று 30.08.2010 திங்கட்கிழமை மாலை 2.30 மணியளவில் கொக்குவில் தாவடியில் அமைந்துள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண சமிதியில் மிஷனின் மேலான ஒரு சமூகப்பணி இடம்பெற்றது.
கொழும்பு ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் தலைவர் தவத்திரு. ஸ்ரீமத் ஸ்வாமி ஸர்வரூபானந்தஜீ மஹராஜ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த போரினால் அவயவங்களை இழந்த சுமார் இருபத்தைந்து பேருக்கு முதற்கட்டமாக செயற்கை அவயவங்கள் வழங்கும் நிகழ்ச்சி அமைதியான முறையில் இடம்பெற்றது.
நல்லை திருஞர்னசம்பந்தர் ஆதீன குருமஹாசந்நிதானம் ஸ்வாமிகளும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் அதை விட சமிதியால்; போரினால் பெரும் பாதிப்பிற்குள்ளாகி தொடர்ந்தும் யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதாந்தம் வழங்கப்பெறும் நன்கொடையும் வழங்கப்பட்டது. இத்துடன் இரு பல்கலைக்கழக மாணவர்களுக்கு அன்பளிப்பாக இரு கணனிகள் வழங்கப்பட்டதுடன் சுதமலை மகாவித்தியாலயத்திற்கும் ஒரு கணனி அன்பளிப்புச் செய்யப்பெற்றது. இத்துடன் கொக்குவில் இந்துக் கல்லூரிக்கும் பெறுமதியான ஒரு அன்பளிப்புச் செய்யப்பட்டதைக் காணமுடிந்தது.
செயற்கை அவயவங்கள் வழங்கப்பெற்ற ஒவ்வொருவரையும் ஸ்வாமி சர்வரூபானந்தஜீ தனித்தனியாக அன்புடன் பேசி அவர்களின் குறைகளைக் கேட்டறிந்ததுடன் ‘உங்களுக்கு ஏற்படும் தேவைகளை நேரடியாக எனது தொலைபேசியில் சொல்லலாம்…’ என்றும் சொல்லி அது பற்றியும் விளக்கியதடன் அவர்களின் தொழில் வாய்ப்புகள் பற்றியும் ஆழமாக விசாரித்தறிந்தார்.
மேலும் இந்நிகழ்வில் ஸ்ரீ ராமகிருஷ்ண சமிதி அறநெறிப்பாடசாலையின் மாணவர்களும் கலந்து கொண்டனர். எந்தவொரு விளம்பரமும் இன்றிச் செயற்படுத்தப் பெற்ற இந்நிகழ்வில் குறித்தளவு பார்வையாளர்களே கலந்து கொண்டனர். இயல்பாக அமைதியாக, மக்கட்ப் பணியாற்றிய மிஷன் ஸ்வாமிகள் இன்னும் இப்பணியைத் தொடர்ந்தும் செய்ய இருப்பதாகத் தெரிவித்தார்.
மக்கட் பணியாற்ற விரும்பும் உள்ளங்கள் ஸ்ரீராமகிருஷ்ண மிஷனுடன் தொடர்பு கொண்டு தங்கள் பணிகளைக் காத்திரமாகச் செய்யலாம். மிஷன் மூலமாக முன்னரே யாழ்ப்பாணம் உள்ளிட்ட இலங்கையின் பல பாகங்களிலும் பேரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல மில்லியன் ரூபா செலவில் பலகட்டங்களாக உதவு தொகைகளும் நன்கொடைகளும் வழங்கப் பெற்றமையும் நீங்கள் அறிந்திருக்கக் கூடும்.
உலகெங்கும் வாழும் அன்புள்ளங் கொண்ட மக்களின் உதவிகளாலேயே தங்களால் இவ்வாறான பணிகளைச் செய்ய முடிகிறது என்றும் ஸ்வாமிகள் குறிப்பிட்டார். தகவல்- தி.மயூரகிரி சர்மா
யாழ்ப்பாணத்திற்கு வரும் வெளிநாட்டவர்களிடம் கப்பம் அறவிடப்படுவதாக வரும் செய்திகளை அடுத்து வெளிநாடுகளில் வாழ்வோர் யாழ்ப்பாணத்திலுள்ள உறவுகளிடம் உங்கு வரலாமா? எனத் தொலைபேசியில் கேட்பதாக இன்று 28.08.2010 வெளியான யாழ். வலம்புரிப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்து வடமராட்சில் தங்கியிருந்த ஒருவரிடம் கப்பம் கோரிய சம்பவம் மற்றுமு; கொக்குவில் பகுதியில் தங்கியிருந்தவர்களுக்கு விடுக்கப்பட்ட மிரட்டல் சம்பவம் முதலியவற்றை அடுத்து இந்த அச்சநிலை தோன்றியிருப்பதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது. தகவல் நீர்வைக்கிழார் (நன்றி : வலம்புரி நாளிதழ்) 28.08.2010
வட இலங்கையின் வன்னிப் பகுதியில் மிகப்பெரிய போர் நிறைவுக்கு வந்திருக்கிறது. போரின் போது எக்கச்சக்கமான உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. வன்னி வாழ் மக்கள் யாவரும் இருப்பிடங்களை விட்டு ஓடினர். ஓரிடத்திலிருந்து ஓரிடம்… அங்கிருந்து இன்னோரிடம்… இப்படியே அலைந்து திரிந்தனர். நோயும் போர் எனும் பேயும் அவர்களைத் துரத்தியது. இவை எல்லாம் நாம் யாவரும் அறிந்தது. இந்த ஓட்டத்தில் ஒரு பெருமாளும் கலந்து கொண்டார்.
தன்னை நம்பியவர்களைக் கைவிடுவதில்லையே அவன். தன்னை நம்பியவர்களுக்கு அபயம் தர அவர்களுடன் அவர்களின் துன்ப துயரை பார்த்து ஆறதல் அளிக்க அவனும் புறப்பட்டு விட்டான். வழமையாக குடை பிடிக்க தீப்பந்தம் முன் வர மங்கல இசை முழங்க எழுந்தருளும் வேங்கடவன் ஓலங்களுக்கு நடுவில் ஓங்காரமாய் நடக்கத் தொடங்கினான்.
ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர தருக்கிலானாகி கம்சன் வயிற்றில் நெருப்பென நின்ற நெடுமர்லே
என்று ஆண்டாள் பாடுவது போல கிருஷ்ணாவதாரச் செயலை அர்ச்சாவதாரமாகவும் செய்து காட்டினான் இந்த அழகன். எங்கு வரை நடந்தான்? இராமநாதன் இடைத்தங்கல் முகாமிலும் போய் அமர்ந்திருந்தான். தன் பக்தர்கள் உணவின்றி, உறக்கமின்றித் தவித்த போது அவனும் அதைக் கண்டு கொண்டே அந்த வேதனையைத் தானும் ஏற்றுக் கொண்டு அமைதியாய் இருந்தான்.
அந்தக் கோவிந்தனின் அருளால் விiவில் நிம்மதி பிறந்தது. மக்கள் தம் இருப்பிடம் ஏகியுள்ளனர். இந்த நிலையில் அவன் தன் ஆலயத்திற்கு மீள எழுந்தருளினான். ஸ்ரீ ரங்கம் நம்பெருமாளும் முகமதியரின் படையெடுப்பின் போது பல்லாண்டு காலம் தென்னகம் எங்கும் வலம் வந்தானல்லவா? அவனது தம்பி இவன்….
இந்த முழங்காவிலின் கிருஷ்ணாநகரில் எழுந்தருளியிருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க அத்புதமான பத்மாவதிதேவி ஸமேத வேங்கடேஸ்வரப் பெருமாளுக்கு எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி மஹாகும்பாபிஷேகம் நிகழவுள்ளது.
இதிலும் சிறப்பு என்ன என்றால்…? இலங்கையில் அஷ்டமித் திதியில் கும்பாபிஷேகம் செய்யும் வழக்கம் எங்குமில்லை. எனினும் கிருஷ்ணனே அஷ்டமியில் பிறந்திருக்கிற போது அந்த ஜென்மாஷ்டமி நாளில் கிருஷ்ணனுக்கு கும்பாபிஷேகம் பண்ணலாமே.. என்று துணிந்து செயற்படுகிறார்கள் கோயிலார்.
இந்த வைபவம் எதிர்வரும் செப்டம்பர் முதலாம் நாள் புதன்கிழமை கிருஷ்ணஜெயந்தியன்று மிகச்சிறப்பாக நிகழவுள்ளது. கோவிந்த நாமம் சொல்லுவோம்….
ஈழத்தின் சிறப்பு மிக்க ஒரே சைவாதீனமான யாழ்.நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன 44வது பீடாரோஹண விழா எதிர்வரும் ஆகஸ்ட் 31 செவ்வாய்க்கிழமை ஆவணிக் கார்த்திகை நாளில் சிறப்புற நிகழவுள்ளது.
அன்றைய தினம் ஆதீனத்தின் முதலாவது குருமஹாசந்நிதானம் சித்தியடைந்த ஸ்ரீலஸ்ரீ ஸ்வாமிநாததேசிகஞானசம்பந்த பரமாச்சர்ய ஸ்வாமிகளின் சமாதிலிங்கம் ஸ்தாபிக்கப்பெற்றுள்ள ஸ்ரீகுருமூர்த்தியாலயத்தில் காலையில் விசேஷ பூஜை வழிபாடுகள் இடம்பெறும்.
தொடர்ந்து வேத, திருமுறைப் பாராயணங்களும் பட்டணப்பிரவேசம், கொலுபூஜை, வீதிவலம் என்பனவும் சிறப்பாக நடைபெறவுள்ளது.
தற்போது மேற்படி ஆதீன மஹாசந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக பரமாச்சார்ய ஸ்வாமிகள் அருளாட்சி செய்து வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
புதிதாகப் வர்ணம் தீட்டப்பெற்றுப் பொலிவு பெற்று விளங்கும் நல்லையாதீனத்தில் நல்லைக் கந்தன் மஹோத்ஸவ காலத்தில் நிகழும் இந்த வைபவம் மிகச்சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீர்வையின் பழம்பெரும் சிவாச்சார்யாராகிய க.தியாகராஜக்குருக்கள் அவர்களின் புதல்வரும் நீர்வை அரசகேசரிப்பிள்ளையார் ஆலய வீதியில் வசித்தவரும் இலங்கையின் உயர் அரசபதவி வகித்தவரும் யாழ்.பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர். ப.கோபாலகிருஷ்ணஐயரின் மாமனாருமாகிய பிரம்மஸ்ரீ. தி.நடனசபாபதிசர்மா தம்பதியினர் பிரான்ஸில் தமது எண்பதாவது அகவைப் பூர்த்தியை “சதாபிஷேக வைபவமாகக்” கொண்டாடியிருக்கிறார்கள். சிறந்த எழுத்தாளருமாகிய சர்மா அவர்கள் ஆங்கிலம், தமிழ், சம்ஸ்கிருதம், சிங்களம் ஆகிய மொழிகளில் பாண்டித்யம் பெற்றவர். சுமார் பத்து தமிழ், சம்ஸ்க்ருத நூல்களை வெளியிட்ட சர்மா அவர்களின் இலக்கியப் பணி பிரான்ஸிலும் தொடர்ந்து கொண்டிருப்பது நீர்வையூருக்குப் பெருமை சேர்ப்பதாயுள்ளது.
திரு. அகிலன் கனகசபேசனின் திட்டத்தை வரவேற்கிறோம். நன்றி. நீர்வேலியைப் பொறுத்தவரையில் இணைய வசதியைப் பெற்றுக் கொள்பவர்களது எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. ஊரவர்கள் நீர்வேலி இணையத்தளத்தைப் பார்ப்பதை விட ஒப்பீட்டு ரீதியில் எமது புலம்பெயர் உறவுகளே அதிகம் பார்வையிடுகின்றனர். வாரமொன்றிற்கு ஏறத்தாழ நானூறு முதல் ஐந்நூறு பேர்வரை இணையத்தைப் பார்வையிடுகின்றனர். மீண்டும் மீண்டும் பார்ப்போரும் இதில் அடக்கம். நீர்வேலியில் டொங்கிள் மூலமே இணைய வசதியைப் பெற்றுக் கொள்கிறோம். ஒப்பீட்டு ரீதியில் இதன் வேகம் குறைவாக உள்ளது. வீடியோ இணைப்புக்களையோ அதிக வலுவுள்ள புகைப்படங்களையோ பார்வையிடுவது இயலாத காரியம். ஆயினும் மெல்ல மெல்ல இதன் வசதி அதிகரித்து வருகின்றது. ஏ.டி.எஸ்.எல் இணைப்பு ஊரில் வழங்குவதற்கு நடவடிக்கைகள் மெல்ல மெல்ல ஆரம்பித்துள்ளன. ஆயினும் முதற்கட்டமாக சில இணைப்புக்கள் மாத்திரமே வழங்கப்படவுள்ளதாகத் தெரியவருகின்றது. நீர்வேலியின் இளஞ்சந்ததி நீர்வை இணையத்தின்பால் நாட்டங் கொண்டுள்ளது. இணைத்தளத் தகவல்கள் பற்றி எம்முடன் நேர் மனப்பாங்குடன் பல இளைஞர்களும் யுவதிகளும் கலந்துரையாடுகின்றனர். இது மகிழ்ச்சிக்குரியது. புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் நீங்கள் வெளிநாட்டுக் கல்வி வாய்ப்புக்கள் பற்றி தமிழில் அறியத் தருவீர்களானால் எமது இளஞ் சந்ததியினருக்கு மிகவும் பயன்படும். நாமும் நேரடியாக அவற்றை இணையத்திலும் எம்முடன் தொடர்புடைய ஊடகங்களிலும் பிரசுரிக்க ஆவன மேற்கொள்வோம். நீர்வேலி இணையச் செய்திகள் பற்றிய உங்கள் விமர்சனங்களையும் உடனுக்குடன் அறிய ஆவலாக உள்ளோம். செய்திகளைப் பார்வையிடுவதுடன் விமர்சனப் பக்கத்திலும் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள். நன்றி ஆசிரியர் குழு சார்பாக.. நீர்வைக்கிழார்
முழங்காவில் கிருஸ்ணா நகர் வெங்கடேசப் பெருமாள் ஆலய மகா கும்பாபிN~கம் எதிர்வரும் 01.09.2010 புதன்னிழமை காலை 11 மணிக்கு இடம்பெறவுள்ளது. கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலின் பிரதம குரு சிவஸ்ரீ கு.இரத்தினேஸ்வரக் குருக்கள் தலைமையில் இடம்பெறவுள்ள கும்பாபிN~கக் கிரியைகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளன. மறுநாள் செவ்வாய்க்கிழமை காலை தொடக்கம் மாலை வரை எண்ணெய்க்காப்பு நிகழ்வும் புதன்கிழமை கும்பாபிN~மும் இடம்பெறவுள்ளன. இவ்வாலயத்தின் உற்சவ மூர்த்தியாகிய வெங்கடேசப் பெருமாள் வன்னியில் ஏற்பட்ட இடப்பெயர்வின் போது தானும் மக்களோடு சேர்ந்து இடம்பெயர்ந்து அபயமளித்தார். தொடர்ந்து வவுனியா இராமநாதன் இடைத்தங்கல் முகாமிலும் எழுந்தருளி அருள்பாலித்தார். தற்போது முழங்காவிலில் மக்கள் மீளக்குடியமர்ந்ததைத் தொடர்ந்து அடியவர்கள் ஆலயத்தைப் புனரமைத்து திருக்குடமுழுக்கு விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். கும்பாபிN~க நாளன்று கிருஸ்ண ஜெயந்தி ஆகையால் மாலை 5 மணிக்கு உறியடி உற்சவமும் இடம்பெறவுள்ளது. கும்பாபிN~க நாளன்று மாலை அருளாசியுரையை நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகளும் ஆசியுகைளை வடமாகாணப் பொது நிர்வாக அமைச்சின் பிரதிப் பிரதம செயலாளர் தி.இராசநாயகமும் இந்து கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசனும் வழங்குவர் வாழ்த்துரைகளை நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், திருமதி விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் வழங்குவர். நிகழ்வில் பிரார்த்தனையுரைகளை மருதங்கேணி உதவி அரச அதிபர் பா.ஸ்ரீஸ்கந்தகுமார், ப+நகரி உதவி அரச அதிபர் சு.வசந்தகுமார், ஊர்காவற்றுறை உதவி அரச அதிபர் க.ஸ்ரீமோகனன் ஆகியோர் வழங்குவர். கோப்பாய் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் சிவத்தமிழ்ச் சொல்லழகர் ச.லலீசனின் தெய்வீகப் பேருரையும் யாழ். சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக் குழுவினர் வழங்கும் தீர்க்கசுமங்கலி என்ற வில்லிசை நிகழ்வும் சிறப்பு நிகழ்வுகளாக இடம்பெறவுள்ளன. கும்பாபிN~கத்தைத் தொடர்ந்து மண்டலாபிN~கம் இடம்பெறவுள்ளது. தகவல் நீர்வைக்கிழார் 27-08-2010
கைதடி இணுங்கித் தோட்டம் அருள்மிகு கந்தசுவாமி கோவிலின் வருடாந்தப் பெருந்திருவிழாவின் போது பெரியபுராணம் என்ற பொருளில் பத்து நாட்கள் தொடர் தெய்வீகப் பேருரையாற்றிய நீர்வை மைந்தனும் கோப்பாய் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளருமான சிவத்தமிழ்ச் சொல்லழகர் திரு. ச.லலீசன் ஆலயப் பரிபாலன சபையினரால் கௌரவிக்கப்பட்டார். ஆலயக் குருக்கள் சிவஸ்ரீ. யோ.குருசாமிக் குருக்கள் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பரிபாலன சபைத் தலைவர் பொன்னாடை போர்த்தி சொற்பொழிவாளரைக் கௌரவித்தார். தினமும் சொற்பொழிவு நிகழ்வில் இருநூற்றைம்பதுக்கும்; மேற்பட்ட அடியவர்கள் கலந்து கொண்டனர் என்பதும் இவர்களுள் இளையவர்களே அநேகர் என்பதும் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்.
நீர்வேலி அருள்மிகு ஸ்ரீ அரசகேசரி விநாயகர் திருக்கோயிலில் எதிர்வரும் 28.08.2010 சனிக்கிழமை காலை 7மணி தொட்டு மஹாகணபதி ஹோம வைபவம் மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளது.
ஆவணி மாத தேய்பிறையில் வரும் விநாயகசதுர்த்திக்கு முந்தைய ‘மஹாசங்கடஹர சதுர்த்தி’ நன்நாளில் இந்த ஹோமம் வருடாந்தம் நடைபெறுவது இவ்வாலய வழக்கம். இந்த வகையில் இவ்வாண்டும் செப்டம்பர் 13ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெறவுள்ள வருடாந்த மஹோத்ஸவத்தின் ஒரு அங்கமாக இந்த ஹோம வைபவம் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.
மேலும் இவ்விழா பொது உபயமாக நடைபெறவுள்ளதால் விரும்பும் அடியவர்கள் தங்கள் காணிக்கைகளையுமு; ஆலயப் பொருளாளரிடம் செலுத்தி பற்றுச்சீட்டைப் பெற்றுக் கொள்ளுமாறும் ஆலய பரிபாலனசபையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
எல்லா சங்கடங்களையும் நீக்கி சந்தோஷமான வாழ்வை எங்கள் அரசகேசரி ஆனைமுகக் கடவுள் தர வேண்டுவோம்.
தகவல்- தி.மயூரகிரி
இணுவில் சைவமகாஜன வித்தியாலய மறைந்த முன்னாள் அதிபரின் நூற்றாண்டு விழா
இணுவில் சைவமகாஜன வித்தியாலய மறைந்த முன்னாள் அதிபர் திரு.வ.நடராசா அவர்களின் நூற்றாண்டு விழா எதிர்வரும் 29.08.2010 ஞாயிற்றுக்கிழமை இணுவில் மத்திய கல்லூரியில் மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளது.
தமிழகம், மயிலாடுதுறை, தர்மபுரம் ஆதீனத்தைச் சேர்ந்த முனைவர் ஸ்ரீலஸ்ரீ குமாரஸ்வாமித் தம்பிரான் ஸ்வாமிகளின் முன்னிலையில் இந்நிகழ்வு கல்லூரி அதிபர் தலைமையில் நடைபெறவுள்ளது.
நூற்றாண்டு விழா மலர் வெளியீடும் மேலும் பல நிகழ்வுகளுமு; இடம்பெறவுள்ளதாயும் அறியமுடிகின்றது.